உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் அமைக்கப்படும் : நிதின் கட்காரி உறுதி
வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் அமைக்கப்படும் நிதின் கட்காரி உறுதி அளித்துள்ளார்.
லக்னோ,
வரும் 2024- ஆம் ஆண்டு முடிவதற்குள் உத்தரபிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலை உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
இது குறித்து நிதின் கட்காரி கூறியதாவது:- வரும் 2024-ம் ஆண்டு முடிவதற்குள் உத்தரபிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக, உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும். அரசாங்கத்திடம் தரமுள்ள சாலைகளை அமைப்பதற்கு பண பற்றாக்குறை இல்லை. உத்தர பிரதேச மாநிலத்தை பொருத்தவரை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சாலை கட்டுமானத்திற்கு, தேவையான பொருட்களை பயன்படுத்துவதே, தற்போதைய காலத்தின் தேவை ஆகும். பொருளாதாரத்துடன், சுற்றுச்சூழலிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றார்.