பெங்களூரு வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ளது தான் கே.ஆர்.புரம் தொகுதி. இந்த தொகுதி கிருஷ்ணராஜபுரம் தொகுதி என்றும் அழைக்கப்படுகிறது. வர்த்தூர் தொகுதியில் இருந்தும், ஒசக்கோட்டை தொகுதியில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது தான் கே.ஆர்.புரம் சட்டமன்ற தொகுதி ஆகும். இந்த தொகுதி நகர் பகுதிகளையும், கிராமங்களையும் உள்ளடக்கியது ஆகும்.
இந்த தொகுதி ராமமூர்த்தி நகர், கே.ஆர்.புரம், பசவனபுரா, தேவசந்திரா, ஏ.நாராயணபுரா, எச்.ஏ.எல். ஏர்போர்ட், ஹொரமாவு, விஜினபுரா ஆகிய 8 மாநகராட்சி வார்டுகளை உள்ளடக்கியது ஆகும். மேலும் கே.நாராயணபுரா, கொத்தனூர், என்.நாகேனஹள்ளி, கியாலசனஹள்ளி, கெட்டலஹள்ளி, ஹொரமாவு அகரா, கே.சன்னசந்திரா, கல்கெரே, சல்கெரே ஆகிய கிராமங்களும் இந்த தொகுதியின் கீழ் அடங்கி உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு இந்த தொகுதியை பா.ஜனதா கைப்பற்றி இருந்த நிலையில் 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பசவராஜ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் நந்தீஸ்ரெட்டியை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதையடுத்து
காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த பசவராஜ், திடீரென கூட்டணி ஆட்சியில் இருந்து விலகி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து அவர் பா.ஜனதாவில் சேர்ந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு கே.ஆர்.புரம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் பசவராஜ் போட்டியிட்டார். அப்போது பா.ஜனதா மீண்டும் இந்த தொகுதியை கைப்பற்றியது. பா.ஜனதா சார்பில் களம் கண்ட பசவராஜ் தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இடைத்தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம்.நாராயணசாமியை 63 ஆயிரத்து 443 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் 3-வது இடத்தை நோட்டா பிடித்தது குறிப்பிடத்தக்கது. 5 ஆயிரத்து 184 பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.
எதிர்வரும் தேர்தலில் பா.ஜனதா சார்பில் மீண்டும் பசவராஜே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் டாக்டர் கேசவ் குமார் களம் நிறுத்தப்பட்டு உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இத்தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்சின் உறவினரான லிங்கராஜ் அர்ஸ் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஏற்கனவே 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதில் பெங்களூருவில் இன்னும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. அதில் கே.ஆர்.புரம் தொகுதியும் ஒன்று.
இத்தொகுதியில் மொத்தம் 5 லட்சத்து 654 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 61 ஆயிரத்து 250 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 39 ஆயிரத்து 239 பேர் ஆவர். 3-ம் பாலினத்தவர் 164 பேர் உள்ளனர். இவர்களுக்காக தொகுதியில் மொத்தம் 447 வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூருவில் மக்கள் நெருக்கடி
அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தொகுதியும் ஒன்றாகும். பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் காரணமாக இத்தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல், அறிவிக்கப்படாத மின்வெட்டு, மழை-வெள்ளத்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலநிலை உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஒரு பக்கம் வளர்ச்சி என்றாலும், அரசியல் பிரமுகர்களின் கைகூலிகள், உள்ளூர் ரவுடிகள் போன்றோர் இந்த தொகுதியில் அதிக அளவில் இருப்பதாகவும், அவர்கள் மூலம் திருட்டு, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நடைபெறுவதாகவும் தொகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுதவிர மாநகராட்சி கவுன்சிலர்கள் இல்லாததால் வார்டுகளின் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். இதனால் மக்களின் அதிருப்தியையும், எதிர்ப்பையும் மீறி வருகிற சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்
கே.ஆர்.புரம் தொகுதியில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகளின் விவரம் பின்வருமாறு:-
ஆண்டு வெற்றி தோல்வி
2008 நந்தீஸ்ரெட்டி(பா.ஜனதா)-1,06,299 பசவராஜ்(காங்.)-82,298
2013 பசவராஜ்(காங்.)-66,355 நந்தீஸ்ரெட்டி(பா.ஜனதா)-57,563
2018 பசவராஜ்(காங்.)-1,35,404 நந்தீஸ்ரெட்டி(பா.ஜனதா)-1,02,675
2019 பசவராஜ்(பா.ஜனதா)-1,39,879 எம்.நாராயணசாமி(காங்.)-76,436
குறிப்பு:-கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது இடைத்தேர்தல் ஆகும்.