விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்

தரிகெரே அருகே விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் ஏராளமான நெல், மக்காச்சோளப் பயிர்கள் நாசமானது.

Update: 2023-03-17 05:15 GMT

சிக்கமகளூரு-

தரிகெரே அருகே விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் ஏராளமான நெல், மக்காச்சோளப் பயிர்கள் நாசமானது.

காட்டுயானைகள் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லக்குவள்ளியை அடுத்து அமைந்துள்ளது தனிகேபைலு கிராமம். இந்த கிராமத்தையொட்டி பத்ரா வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இதனால் அடிக்கடி இந்த வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள், புலி, சிறுத்தைகள் இரைத்தேடி கிராமத்திற்குள் வந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றன.

இதனால் விவசாயிகள், கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் இந்த வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விளை பயிர்கள் நாசம்

இந்நிலையில் நேற்று முன்தினம் பத்ரா வன விலங்குகள் சரணாலயத்தில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் வெளியேறியது. இந்த காட்டுயானைகள் தனிகேபைலு கிராமத்தில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அங்கு தோட்டத்தில் விளைவித்திருந்த மக்காக்சோளம், நெல் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. மேலும் அங்கிருந்த பாக்கு மரங்களை முறித்து, எரிந்துவிட்டு சென்றது. இதை பார்த்த விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.

மேலும் இது குறித்து தரிகெரே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர். மேலும் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நிரந்தரமாக தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்