காட்டு யானை தாக்கி பெண் பரிதாப சாவு
ராம்நகரில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார்.
ராமநகர்:
ராமநகர் மாவட்டம் சென்னபட்டனா தாலுகா ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சென்னம்மா (வயது 56). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்காக சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது காட்டு யானையை பார்த்து சென்னம்மா அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அதற்குள் காட்டு யானை, சென்னம்மாவை தும்பிக்கையால் தூக்கி வீசி, காலால் மிதித்தது.
இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.