விவசாயியை தாக்கிய காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

குண்டலுபேட்டையில் விவசாயியை தாக்கிய காட்டுயானையை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Update: 2023-01-07 21:25 GMT

கொள்ளேகால்:

குண்டலுபேட்டையில் விவசாயியை தாக்கிய காட்டுயானையை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

விவசாயியை தாக்கியது

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பெட்டதமடஹள்ளி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுயானை ஒன்று விவசாயியை தாக்கியது. கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து வனத்துறையினர் உதவியுடன் அந்த யானையை வனப்பகுதிக்குள் துரத்திவிட்டனர். இந்நிலையில் மீண்டும் அந்த யானை நேற்றும் குண்டலுபேட்டை பகுதியில் உள்ள விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் உடனே கும்கிகளான அபிமன்யு, மகேந்திரா, கணேஷ் ஆகிய காட்டுயானைகளுடன் விரைந்து வந்தனர். அப்போது கும்கி யானையை பார்த்த காட்டுயானை அங்கிருந்து ஓடி சென்றது. இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் விடாமல் துரத்தி சென்றனர். இறுதியாக மயக்க ஊசியை செலுத்தி பிடிக்க முயற்சித்தனர்.

மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

அதன்படி சரியாக குறி பார்த்து காட்டுயானை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்த ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் காட்டுயானை அங்கிருந்து மதம் பிடித்ததுபோன்று ஓடி சென்றது. இதையடுத்து சிறிது தூரம் சென்ற அந்த காட்டுயானை, கீழே சுருண்டு விழுந்தது. இதையடுத்து கயிறு மூலம் அந்த யானையை வனத்துறையினர் கட்டினர். பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் அந்த காட்டுயானையை லாரியில் ஏற்றினர். தற்போது அந்த யானை பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்