சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-09-24 02:10 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டனர். அதன்பின்னர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் இன்றுகூட அமல்படுத்தலாம். ஆனால் தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கு தள்ளிப்போட அரசு விரும்புகிறது.

இந்த ஒதுக்கீட்டை தற்போதே அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் அதில் சேர்க்க வலியுறுத்துகிறது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தள்ளிப்போட்டு உள்ளது.

பிரதமர் 24 மணி நேரமும் இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்து பேசுகிறார். அவர்களை மதிப்பது பற்றி பேசுகிறார். பிறகு ஏன் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிரதமர் அஞ்சுகிறார்?

பிரதமரே, சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தியது என்பதை உங்கள் அடுத்த உரையில் இந்தியாவுக்கு சொல்லுங்கள். உங்களிடம் புள்ளிவிவரங்கள் உள்ளன. அதை மக்களுக்கு காட்டுங்கள். மேலும் சாதி அடிப்படையில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவமதிக்காதீர்கள். அவர்களை ஏமாற்றாதீர்கள்.

நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நான் எழுப்பியதும், பா.ஜனதா எம்.பி.க்கள் எனது குரலை ஒடுக்க பார்க்கின்றனர். பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு குறித்து பா.ஜனதா தொண்டர்களிடம் கேட்டால், அவர்கள் நழுவி விடுவார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்