முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன்? நடிகை அனு பிரபாகர் பகீர் தகவல்
முதல் கணவரை விவாகரத்து செய்தது பற்றி நடிகை அனு பிரபாகர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு,
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் அனு பிரபாகர். திரை உலகில் உச்சத்தில் இருந்தபோதே இவர் கன்னட நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார் என்பவரை கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 12 வருடங்கள் அவருடன் வாழ்ந்த அனு பிரபாகர், கடந்த 2014-ம் ஆண்டு முதல் கணவரை பிரிந்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு ரகு முகர்ஜி என்ற கன்னட நடிகரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு நந்தனா என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் தனது முதல் திருமண பந்தம் முறிந்தது குறித்து அனு பிரபாகர் முதல் முறையாக பேசியிருக்கிறார்.
கன்னட தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், 'நான் இதுவரையில் என்னுடைய முதல் திருமண பந்தம் முறிவுக்கு வந்தது பற்றி பேசவில்லை. தற்போது நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமாருடன் திருமணம் நடந்தபோது முதலில் என்னை அவர்கள் நன்றாக கவனித்துக்கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை கைவிடக்கூடாது என்று நடிகை ஜெயந்தி என்னிடம் கூறினார். மேலும் முதலில் கண்ணியமாக உடைகள் அணிய கூறிய அவர் பின்னர் மிகவும் மார்டனாக உடைகள் அணிய வற்புறுத்தினார். கணவன், மனைவிக்குள் 3-ம் நபர் வருவதை நான் விரும்பவில்லை.
அது யாராக இருந்தாலும் சரி. இதனால் நான் மனமுடைந்தேன். வாழ்க்கை என்பது ஒருமுறை தான். அதை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும். மனதில் வேதனையோடு வாழக்கூடாது. அதனால்தான் நான் எனது முதல் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டேன்' என்று தெரிவித்தார். தற்போது நடிகை அனு பிரபாகரின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.