எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமொக்காவில் ஆதிக்கம் செலுத்தபோவது யார்?

கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டங்களில் ஒன்று சிவமொக்கா. இது முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் சொந்த மாவட்டம் ஆகும். எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் சிவமொக்காவில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2023-03-31 22:06 GMT

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதாவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. இந்த 2 தேசிய கட்சிகளுக்கு எதிராக மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியும் போட்டி போட்டு வருகிறது.

இந்த நிலையில் மலைநாடு என்ற பெயர் பெற்ற சிவமொக்கா மாவட்டத்தை கைப்பற்ற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. அந்த மாவட்டத்தில் சிவமொக்கா, சிவமொக்கா புறநகர், பத்ராவதி, சாகர், தீர்த்தஹள்ளி, சிகாரிபுரா, சொரப் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின் போது 6 இடங்களில் பா.ஜனதாவும், ஒரு இடத்தில் காங்கிரசும் கைப்பற்றின. இந்த நிலையில் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களில் சிலரே இந்த முறையும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

சிவமொக்கா டவுன்- புறநகர்

சிவமொக்கா டவுன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்கு அங்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். வயது மற்றும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் கிடைக்காது என்றே தெரிகிறது. இதனால், தனது மகனுக்கு சீட் கேட்டு ஈசுவரப்பா காய் நகர்த்தி வருகிறார்.

காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த கே.பி.பிரசன்னகுமார், சீட் கேட்டு வருகிறார். அக்கட்சியில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஜனதாதளம்(எஸ்) கட்சியிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

சிவமொக்கா புறநகர் தொகுதியில் கடந்த முறை பா.ஜனதாவின் அசோக் நாயக் வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிைடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த சாரதா பூர்யாநாயக்கிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

பத்ராவதி-சாகர்

பத்ராவதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. பி.கே.சங்கமேஸ்வர் மீண்டும் களத்தில் குதிக்கிறார். அவரை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் அப்பாஜிகவுடாவின் மனைவி சாரதா அப்பாஜி கவுடா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதாவுக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

சாகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போது கோபாலகிருஷ்ணா புலூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. ஹரதாளு ஹாலப்பா போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் வேட்பாளர் யார்? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தீர்த்தஹள்ளி- சிகாரிப்புரா-சொரப்

தீர்த்தஹள்ளி தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ.வும், போலீஸ் மந்திரியுமான அரக ஞானேந்திரா போட்டியிடுவார் என தெரிகிறது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் ராஜராம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை உறுதி செய்யவில்லை.

சிகாரிப்புரா தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா போட்டியிடவில்லை என உறுதியாக கூறிவிட்டார். இதனால், அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் அவரது மகன் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளர்கள் உறுதி செய்யப்படவில்லை.

சொரப் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மது பங்காரப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர், இந்த முறை காங்கிரசுக்கு தாவி அங்கிருந்து போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் மது பங்காரப்பாவின் சகோதரரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான குமார் பங்காரப்பா போட்டியிடுவார் என தெரிகிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சி அங்கு பலமான வேட்பாளரை தேடுகிறது.

ஆதிக்கம் செலுத்தபோவது யார்?

கடந்த தேர்தலின் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா சிவமொக்கா மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இந்த முறை அவ்வளவு எளிதாக பா.ஜனதா வெற்றியை பெற முடியாது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏனெனில், பா.ஜனதாவின் பலம் வாய்ந்த தலைவரான எடியூரப்பா, தேர்தல் அரசியலில் ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்து விட்டதால், அவரது சொந்த மாவட்டத்தில் பா.ஜனதா மீண்டும் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் எடியூரப்பாவுக்கு சொந்த மாவட்டம் என்பதால், அவர் இந்த மாவட்டத்தில் தனது பலத்தை நிரூபிக்க கடுமையாக போராடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. மொத்தத்தில் சிவமொக்காவில் ஆதிக்கம் செலுத்தபோவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

கடந்த தேர்தல் வெற்றி, தோல்வி நிலவரம்

தொகுதி வெற்றி தோல்வி

சிவமொக்கா டவுன் ஈசுவரப்பா(பா.ஜ.க.).......1,04,027 பிரசன்னகுமார்(காங்.)..........57,920

சிவமொக்கா புறநகர் அசோக் நாயக்(பா.ஜ.க.).....69,326 சாரதாபூர்யா நாயக்(ஜ.தளம்-எஸ்)......65,549

பத்ராவதி சங்கமேஸ்வர்(காங்.).........75,722 அப்பாஜி(ஜ.தளம்-எஸ்)........64,155

தீர்த்தஹள்ளி அரக ஞானேந்திரா(பா.ஜ.க.)....67,527 கிம்மனே ரத்னாகர்(காங்.)........45,572

சிகாரிப்புரா எடியூரப்பா(பா.ஜ.க.).........86,983 கோனி மாலதேஷ்(காங்.).....51,586

சொரப் குமார் பங்காரப்பா(பா.ஜ.க.)...72,091 மது பங்காரப்பா(ஜ.தளம்-எஸ்)...58,805

சாகர் ஹரதாளு ஹாலப்பா(பா.ஜ.க.)...78,475 காகோடு திம்மப்பா(காங்.)....70,136

Tags:    

மேலும் செய்திகள்