புலி வரும்போது நரிகள் ஓடிவிடும்; பிரதமர் மோடியின் தெலுங்கானா வருகை குறித்து பாஜக தலைவர் கருத்து
புலி வரும்போது நரிகள் ஓடிவிடும் என்று தெலுங்கானா பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் மற்றும் அரசு பொதுநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தெலுங்கானா வந்துள்ளார்.
தெலுங்கானாவுக்கு வந்த பிரதமர் மோடியை அம்மாநில மந்திரி ஸ்ரீனிவாஸ் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். ஆனால், பிரதமர் மோடியை வரவேற்க தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் விமான நிலையம் வரவில்லை.
அதேவிமான நிலையத்தில் சில மணி நேரத்திற்கு முன் வந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. பிரதமர் மோடியை முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றிருக்க வேண்டும் என பாஜக தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சந்திரசேகர ராவை விமர்சித்த தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கூறுகையில், புலி வரும்போது நரிகள் ஓடிவிடும். தற்போது புலி வரும்போது, சந்திரசேகர ராவ் ஓடிவிட்டார். சந்திரசேகர ராவ் ஏன் இப்படி செய்தார் என்று எங்களுக்கு தெரியவில்லை. வரும் நாட்களில் காவி, தாமரை கொடி இங்கு ஏற்றப்படும்' என்றார்.