பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டதும், கருப்பு பலூன்களை பறக்க விட்ட காங்கிரஸ் தொண்டர்

ஆந்திர பிரதேசத்தில் சுற்று பயணம் முடித்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றதும், காங்கிரஸ் கட்சி தொண்டர், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்க விட்டார்.

Update: 2022-07-04 13:11 GMT



அமராவதி,

ஆந்திர பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழாவை முன்னிட்டு, 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

"டிஜிட்டல் இந்தியா பாஷினி", "டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ்" உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மை ஸ்கீம், மேரி பெஹச்சான் ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். பீமாவரத்தில் உரையாற்றிய பிறகு, ஆந்திராவை சேர்ந்த மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை (வயது 90) சந்தித்து அவரது காலைத்தொட்டு வணங்கினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு சென்றார்.

ஆந்திர பிரதேசத்தில் சுற்று பயணம் முடித்து கொண்டு ஹெலிகாப்டர் ஒன்றில் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அவர் சென்றதும், காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் டி.எஸ்.பி. விஜய் பால் கூறும்போது, இந்த சம்பவத்தில் 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கன்னாவரம் விமான நிலையத்திற்கு வரும்போது, பாதுகாப்பு விதிமீறல்கள் எதுவும் ஏற்படவில்லை. விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டு சென்ற 5 நிமிடங்களுக்கு பின்னரே பலூன்கள் பறக்க விடப்பட்டன என போலீசார் விளக்கம் தெரிவித்து உள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்