பிறந்தநாள் கொண்டாட சென்றபோது கார்-ஜீப் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு

பிறந்தநாள் கொண்டாட சென்றபோது கார்-ஜீப் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார். மற்ற 5 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-10-14 18:45 GMT

சிக்கமகளூரு;

கார்-ஜீப் மோதல்

சிக்கமகளூரு டவுன் சங்கர்புரா பகுதியை சோ்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவரது மனைவி காவ்யா (30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கார்த்திக் இளைய சகோதரர் மனைவி லாவண்யா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கடந்த 10-ந்தேதி காவ்யாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மைசூருவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

ஹாசன் மாவட்டம் பேளூர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் எதிரே ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கண்இமைக்கும் நேரத்தில் ஜீப்பும், காரும் நேருக்கு நேர் மோதிகொண்டது.

இதில் காரில் முன்பக்கம் அமர்ந்திருந்த காவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கார்த்திக் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஹாசனில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து பேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பெண் சாவு

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்