காட்டெருமையை விரட்ட சென்றபோது தவறி விழுந்தார்; துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி பலியான சோகம்

ஒசநகர் அருகே, காட்டெருமையை விரட்ட சென்றபோது தவறி விழுந்து துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் விவசாயி பலியான சோக சம்பவம் நடந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-28 15:19 GMT

சிவமொக்கா;


பாக்கு மரங்கள் நாசம்

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா நேகிலோனி கிராமத்தை சேர்ந்தவர் அம்பரீஷ் (வயது 30). இவருக்கு அதே பகுதியில் உள்ள வனப்பகுதி அருகே சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அவர் பாக்குகள் பயிரிட்டு இருந்தார். இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டெருமை ேபான்ற வனவிலங்குகள் தோட்டத்்திற்குள் புகுந்து பாக்கு மரங்களை நாசப்படுத்தி வந்தது.

இதற்காக அவர் இரவு நேரங்களில் வனவிலங்குகளை விரட்ட தோட்டத்திற்கு காவலுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் அவர் கடந்த 26-ந்தேதி இரவு தோட்ட காவலுக்கு சென்று இருந்தார். அவருடன் உறவினரான கீர்த்தி என்பவரும் சென்று இருந்தார். அவர் வனவிலங்குகளை விரட்ட தான் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியையும் எடுத்து சென்றார்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து...

இதையடுத்து நேற்றுமுன்தினம் காலை தோட்டத்திற்கு சென்ற இருவரில் கீர்த்தி மட்டுமே வீட்டிற்கு திரும்பி வந்தார். ஆனால், அம்பரீஷ் வரவில்லை. இதுகுறித்து கீர்த்தியிடம், அம்பரீசின் குடும்பத்தினர் கேட்டனா். அதற்கு அவர் இரவு தான் மட்டுமே காட்டெருமையை விரட்டி சென்று விட்டு திரும்பி வந்ததாகவும், அம்பரீஷ் பிறகு வருவதாக கூறி காட்டிலேயே இருப்பதாகவும் கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கீர்த்தியுடன் சேர்ந்து காட்டுப்பகுதிக்கு சென்று உள்ளனர். அங்கு அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர், அந்த பகுதியில் இருந்த பாறைக்கு கீழ் அம்பரீஷ் பிணமாக கிடந்துள்ளார். அவரது கால் பகுதியில் நாட்டு துப்பாக்கி கிடந்துள்ளது. மேலும் அவரது மார்பு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது.

தீவிர விசாரணை

இதுகுறித்து ஒசநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் காட்டெருமையை விரட்டி சென்றபோது தவறி விழுந்ததில் தான் வைத்திருந்த துப்பாக்கியின் குண்டு பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்