நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன? எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன.?
நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு நாடாளுமன்ற நடைமுறை. ஆளும் அரசின் பலத்தை சோதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம் ஆகும்.
புதுடெல்லி,
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளுக்கு நாள் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதன் 'ஹைலைட்' என்றால் மணிப்பூர் விவகாரம் தான். இதுபற்றி பிரதமர் மோடி விரிவாக பேச வேண்டும். தங்களையும் பேச அனுமதித்து நேரம் ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஆனால் அதற்கான வாய்ப்பு அளிக்கப்படாததால் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம், அமளி, ஒத்திவைப்பு என சென்று கொண்டிருக்கிறது.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மக்களவை எம்.பி., கவுரவ் கோகோய் , திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது, அரசின் மீதோ, ஒரு நபரின் மீதோ குற்றச்சாட்டை முன் வைத்து அதன் மீதான வாக்கெடுப்பை நடத்தி முடிவு எட்டப்படுவது ஆகும். இதனை நாடாளுமன்றத்தின் மக்களவையில் மக்களவை எம்.பி.க்கள் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஏனென்றால் மக்களவையில் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது குறைந்தது 50 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அப்போது தான் அந்த தீர்மானம் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்படும். மக்களவை விதிமுறை பிரிவு 198ன்கீழ், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் அந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக அதிக வாக்கு கிடைக்கப்பெற்றால் அரசு பதவி விலக வேண்டும்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செயப்பட்டு, அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் அடுத்த 10 நாட்களுக்குள் விவாதம் நடத்தி, வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விரைவில் விவாதம் நடக்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகாலத் ஜோஷி தெரிவித்திருந்தார். காங்கிரஸ் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு ஏற்பதாகவும், விவாதத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றால் மத்திய அமைச்சரவை தலைவர் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் மணிப்பூர் தொடர்பான கேள்விகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்க திட்டமிட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவை இந்திரா காந்தி ஆட்சியில் 15 முறை, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சியில் தலா 3 முறை, வாஜ்பாய் ஆட்சியில் ஒருமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் ஏப்ரல் 1999ல் வாஜ்பாய் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 269, 270 என ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி கவிழ்ந்தது. மோடி ஆட்சிக்கு எதிராக 2018ல் ஒருமுறை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.