கர்நாடக பட்ஜெட்டில் பொதுமக்கள், தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் என்ன?

கர்நாடக பட்ஜெட் வருகிற 17-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று தொழில்துறையினரும், பொதுமக்களும் தங்களது எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து கூறியுள்ளனர்.

Update: 2023-01-29 20:54 GMT

கவர்ச்சி திட்டங்கள்

கர்நாடக சட்டசபையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வருகிற 10-ந் தேதி கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையுடன் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து வருகிற 17-ந் தேதி 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்கிறார். இது கர்நாடக பா.ஜனதா அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து சிலரை தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டோம். அவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். தொழில்அதிபர் டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி. கூறியதாவது:-

பார்க்க முடியாது

கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் இரட்டை என்ஜின் அரசு நடப்பதாக சொல்கிறார்கள். இந்த இரட்டை என்ஜின் அரசால் எந்த பணிகளும் நடக்கவில்லை. பா.ஜனதா கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதன் மூலம் அக்கட்சி மக்களை ஏமாற்றிவிட்டது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு பல்வேறு ஊழல்களை செய்துள்ளனர். கர்நாடக சட்டசபைக்கு தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் மாநில அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

இதில் அறிவிக்கப்படும் திட்டங்கள், மீண்டும் பா.ஜனதா அரசு அமைந்தால் தான் நிறைவேற்ற முடியும். இல்லாவிட்டால், வேறு கட்சியின் அரசு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும். மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும். தேர்தலை மனதில் வைத்து தான் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள். அதனால் இதில் பெரிதாக ஒன்றும் பார்க்க முடியாது. ஆனால் தொழில்துறையினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு டி.ஏ.ஷரவணா கூறினார்.

வேலை வாய்ப்புகள்

பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'கர்நாடக பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கொரோனா பரவல் காரணமாக தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களை போன்ற தொழில்துறையினருக்கு அரசு உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு உதவி செய்ய வேண்டும். அரசு உதவி செய்தால் நிறுவனங்கள் நன்றாக செயல்பட முடியும். அதன் மூலம் வேலை வாய்ப்புகளும் உருவாகும். அரசு செய்யும் உதவி மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் உதவும். இதை மனதில் கொண்டு பட்ஜெட்டில் தொழில்துறையினருக்கு உதவிகளை அறிவிக்க வேண்டும்' என்றார்.

பெங்களூரு இந்திய அறிவியல் கழக விஞ்ஞானி பிரவீன் ராமமூர்த்தி கூறுகையில், 'கர்நாடக அரசு வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இதில் உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வெறும் உதிரி பாகங்கள் துறைக்கு மட்டும் முன்னுரிமை அளிக்க கூடாது. அதேபோல் அறிவியல், மருந்தியல் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குடிநீர், மாசு, மின்சாரம், சாலைகள் விஷயத்தில், புதிய சாலைகள் அமைப்பது மட்டுமின்றி ஏற்கனவே உள்ள சாலைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். முன்னணி கல்வி நிறுவனங்கள் மூலம் அனைவருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும்' என்றார்.

ஒப்புதல் பெறுவதில் தாமதம்

இதுபற்றி சிவமொக்கா மாநகராட்சி மேயர் சிவக்குமார் கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சியை மேம்படுத்த மாநில அரசாலும், சுற்றுலா துறையாலும் கடந்த பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான வரைவு திட்டங்கள் தயாராக உள்ள நிலையில், திட்டத்தை விரைந்து முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று ராகவேந்திரா எம்.பி. பாடுபட்டு வருகிறார். ஆனால் இந்த பகுதி மத்திய வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடியாததற்கு இதுதான் காரணம். மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிக்கமகளூரு மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் புட்டசாமி கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் பாக்கு தான் முக்கிய தொழில் ஆகும். அந்த தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. குறிப்பாக பாக்குகளை தாக்கும் நோய்களை கண்டறிந்து தடுக்க ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும். ஏற்கனவே பட்ஜெட்டில் சிக்கமகளூருவுக்காக அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பாபாபுடன் கிரி, முல்லையன்கிரிக்கு ரோப் கார் வசதி அமைக்கப்படும் என்று அறிவித்த நிலையில், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அரசால், இந்த முறை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லாமல், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும். அதுதான் பொதுமக்கள் எதிர்பார்ப்பு ஆகும். முக்கியமாக வரி இல்லாத பட்ஜெட்டாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுமையை மேலும் வைக்காமல்...

சிக்கமகளூரு கெம்பனஹள்ளியைச் சேர்ந்த சிறு வியாபாரியான எஸ்.முத்து கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் அதில் என்ன திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகிறது என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. சிறு வியாபாரிகளுக்காகவும், சாதாரண மக்களுக்காகவும் அறிவிக்கப்படும் திட்டங்களை கேட்கும்போது காதுக்கு குளிர்ச்சியாக உள்ளது. ஆனால் அந்த திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைவது இல்லை. இந்த பிரச்சினையை முதலில் களைய வேண்டும். பட்ஜெட் என்பது அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஏழைகள், சாதாரண மக்கள் மீது சுமையை மேலும் வைக்காமல் இருப்பது போன்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்றாட செலவுகளை குறைக்க வேண்டும்

இதுகுறித்து கோரமங்களாவை சேர்ந்த மாரி கூறும்போது, 'கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த பட்ஜெட்டில் ஏழை, கூலித்தொழிலாளர்கள், நடுத்தர மக்களுக்கு திட்டங்களை அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் திட்டம் இருக்க வேண்டும். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமானம் உள்பட கூலித்தொழில் செய்ய பெங்களூருவுக்கு ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் எந்த வசதியும் இல்லாத கொட்டகைகளில் தங்குகிறார்கள். அத்தகைய தொழிலாளர் வர்க்கத்தினருக்கு இரவில் தங்க வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் வசதிக்காக புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் இருந்து வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வரி தொகையை என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளை குறைக்க வேண்டும்' என்றார்.

மடிவாளா பகுதியை சேர்ந்த மனோகரன் கூறுகையில், 'கர்நாடக பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்காக திட்டங்களை அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்கும் வகையில் வரிகளை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான வரிகளை குறைக்க வேண்டும். ஒரு சிலிண்டரின் விலை ரூ.ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டது. இவ்வாறு இருந்தால் ஏழை, நடுத்தர மக்கள் எப்படி பிழைப்பை நடத்த முடியும். ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்' என்றார்.

மொத்தத்தில் கர்நாடக பட்ஜெட் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்