மேற்கு வங்காளம்: 2021-ல் விவசாயிகள் தற்கொலை விவரம்; மாநில அரசு-122, என்.சி.ஆர்.பி.-0 என தகவல்
மேற்கு வங்காளத்தில் 2021-ம் ஆண்டில் மொத்தம் 122 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர் என அரசும், உயிரிழப்பு இல்லை என என்.சி.ஆர்.பி.யும் முரண்பட்ட தகவலை தெரிவித்து உள்ளன.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடந்த ஆண்டில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை பற்றி சமூக ஆராய்ச்சியாளர் பிஸ்வனாத் கோஸ்வாமி எழுப்பிய கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, 2021-ம் ஆண்டில் மொத்தம் 122 பேர் உயிரிழந்து உள்ளனர் என மேற்கு வங்காள அரசு சார்பிலான ஆவணங்கள் வழியே தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் விவசாய பிரிவில் மட்டுமே இந்த தற்கொலைகள் நடந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு 2022-ம் ஆண்டில் இந்த மாவட்டத்தில் 34 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆனால், சமீபத்தில் தேசிய குற்ற ஆவண பதிவு வாரியம் (என்.சி.ஆர்.பி.) சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், 2021-ம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மேற்கு வங்காள அரசு வெளியிட்ட தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முரண்பட்டு அமைந்துள்ளது.
இதனால், மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு அளிக்கும் தகவல் உள்நோக்கத்துடன் திரித்து கூறப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநிலத்தின் தோற்றம் நல்ல முறையில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில், என்.சி.ஆர்.பி.க்கு அனைத்து புள்ளி விவரங்களையும் மாநில அரசே அனுப்பி வைக்கும் என தகவல் கூறுகிறது. மேற்கு வங்காளத்தில் குற்றங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளன.