காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறுபாிசீலனை செய்ய கோருவோம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி பிறப்பித்த காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோருவோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
தமிழகத்திற்கு போதவில்லை
தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. நீர் திறக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த 15-ந் தேதி அன்று அறிவித்தார். இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்திற்கு காவிரியில் சுமார் 20 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காவிரி படுகையில் மழை குறைந்துள்ளது. தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டோம். இது தமிழகத்திற்கு போதவில்லை. ஆனாலும் அந்த நீரை தமிழகம் பயிர் சாகுபடிகளுக்கு பயன்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கருத்து
இதற்கிடையே அந்த உத்தரவை வாபஸ் பெறுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்தை கேட்போம். ஏனெனில் குடிநீருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்ததற்கு குமாரசாமி, பசவராஜ் பொம்மை ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்களின் ஆட்சி காலத்திலும் தண்ணீரை திறந்துவிட்டனர். அதற்கு ஆதாரங்களும் உள்ளன. இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. அணைகளின் சாவி ஆணையத்திடம் உள்ளது. காவிரி பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கேட்போம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.