கூட்டணிக்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை - தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

கூட்டணிக்கு யார் வந்தாலும் எங்கள் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2024-02-07 08:14 GMT

கோப்பு படம்

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனிடையே, பா.ஜ.க. மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றாகி விட்டது. 3-வது அணி அமைக்க திட்டமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமித்ஷா 'கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்' என்று கூறினார்.

கூட்டணிக்கான எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன என உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய நிலையில் கூட்டணிக்கான கதவை அ.தி.மு.க. மூடிவிட்டதாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், 'கூட்டணிக்கான கதவுகளை பா.ஜ.க. திறந்து வைத்திருக்கலாம், ஆனால் அ.தி.மு.க. கதவை மூடிவிட்டது. பா.ஜ.க. யாருக்கு வேண்டுமானாலும் கதவுகளை திறந்து வைத்திருக்கட்டடும். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை யாரும் விரும்பவில்லை. பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அ.தி.மு.க. முன்வைத்த காலை பின் வைக்காது' என்றார்.

இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

'தினத்தந்திக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரை கூறி (அ.தி.மு.க.) அந்த கட்சி கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அமித்ஷா அதற்கு நிலையான பதிலை கூறினார். பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வந்தாலும் எங்கள் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன. நாங்கள் அதில் தெளிவாக இருக்கின்றோம். ஆனால், பிரதமர் மோடியின் தலைமையை ஏற்றுக்கொண்டு வரவேண்டும். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை. இது அவரவர் முடிவு.

ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுகள் எல்லோருக்கும் திறந்தே இருக்கும் என்று கூறினார். தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. கூட்டணிக்கு யாரும் வரக்கூடாது என்று உள்ளதா? எல்லோருக்கும் கூட்டணி கதவுகள் திறந்து உள்ளன. கூட்டணிக்கான அடிப்படை என்பது பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்டு வர வேண்டும்.

கூட்டணி எப்படி இருக்கும், கூட்டணியில் எந்த தலைவர்கள், கட்சிகள் இருக்கும் என்பதை வரும் காலங்களில் நாங்கள் கூறுவோம். தற்போது பிப்ரவரி முதல் வாரத்தில் இருக்கிறோம் இன்னும் நேரமும், காலமும் உள்ளது.

அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு வர வேண்டும். இதுதான் அடிப்படை. இதில் யாரும் யாரையும் வற்புறுத்தப்போவதில்லை.

எத்தனையோ கட்சிகள் பேசிக்கொண்டிருக்கின்றன. நேரமும் காலமும் வரும்போது நீங்கள் பார்ப்பீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது நாங்கள். அமித்ஷா கூறியதை யாரும் திரித்து பேச வேண்டாம்.  அவர் பொதுவான கேள்விக்கு பொதுவான பதில் அளித்துள்ளார்' என்றார்.



Tags:    

மேலும் செய்திகள்