பெங்களூருவில் 2 வார்டுகளில் நம்ம கிளினிக் தொடக்கம்
பெங்களூருவில் 2 வார்டுகளில் நம்ம கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த மார்ச் மாதம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்திருந்தார். அப்போது பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நம்ம கிளினிக் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் முதற்கட்டமாக 2 வார்டுகளில் நம்ம கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு மல்லேசுவரம் மற்றும் பத்மநாபநகர் வார்டுகளில் இந்த நம்ம கிளினிக் தொடங்கப்பட்டு இருக்கிறது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்று கடந்த மாதம் (ஜூலை) 28-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றிருந்தது. இந்த ஒரு ஆண்டு சாதனையாக பெங்களூருவில் முதல்கட்டமாக 2 வார்டுகளில் நம்ம கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 மாதங்களில் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் தற்போது 2 வார்டுகளில் தொடங்கப்பட்டுள்ள நம்ம கிளினிக்கில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகளும், டாக்டர்கள், நர்சுகள், ஆய்வக ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை நம்ம கிளினிக் திறந்து இருக்கும். பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ள 2 நம்ம கிளினிக்களுக்கு தினமும் 40 முதல் 50 நோயாளிகள் வருவதாகவும், மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.