காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என யாரும் இல்லை - சசிதரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலை நேர்மையாக நடத்த சோனியா காந்தி குடும்பத்தினர் விரும்புகிறார்கள் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்தார்.

Update: 2022-10-01 15:04 GMT

நாக்பூர்,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவை விதிமுறைகளின் படி பூர்த்தி செய்யாததால் கே.என் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.இதன்மூலம், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம், நாக்பூரில் உள்ள தீக்சாபூமி நினைவு சின்னத்தை சசிதரூர் இன்று பார்வையிட்டார்.

அதன்பின் நிருபர்களிடம் அவர் பேசியதாவது, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நாங்கள் மரியாதை கொடுக்கிறோம். ஆனால் கட்சியில் உள்ள இளைஞர்களின் குரலை கேட்க வேண்டிய நேரம் இது. நாங்கள் கட்சியின் கட்டமைப்பை மாற்றுவதற்கு பாடுபடுவோம். கட்சித் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். என்றார்.

மேலும், காந்தி குடும்பத்தின் ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருப்பதாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், காந்தி குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரையும் (சோனியா, ராகுல், பிரியங்கா) சந்தித்து பேசினேன். கட்சியின் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என யாரும் இல்லை என அவர்கள் திரும்ப திரும்ப கூறினார்கள். அதுபோல வேட்பாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

அவர்கள் நேர்மையான தேர்தலை விரும்புகிறார்கள். காந்தி குடும்பத்தினர் நடுநிலையாகவும், கட்சி பாரபட்சமற்றதாகவும் இருக்கும். நல்ல முறையில் தேர்தல் நடத்தி கட்சியை பலப்படுத்த வேண்டும். கட்சி தலைவரே உறுதியளித்தபோது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்