கொரோனாவுக்கு கணவனை பறிகொடுத்த நிலையில் விபத்தில் மகள்-மகனுடன் பலியான பெண் குறித்து உருக்கமான தகவல்

கொரோனாவுக்கு கணவனை பறி கொடுத்த நிலையில், விபத்தில் மகள்-மகனுடன் பலியான பெண் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-10-16 18:45 GMT

பெங்களூரு: கொரோனாவுக்கு கணவனை பறி கொடுத்த நிலையில், விபத்தில் மகள்-மகனுடன் பலியான பெண் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

விபத்தில் 10 பேர் பலி

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா பானாவரா ஹோப்ளி ஹள்ளிகெரே கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு அரசு பஸ், சுற்றுலா வேன் மற்றும் பால் டேங்கர் லாரி ஆகியவை மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் சுற்றுலா வேன் சுக்குநூறாகிப் போனது. இதில் சுற்றுலா வேனில் பயணித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 10 பேர் பலியானார்கள்.

இந்த கோர விபத்தில் ஹள்ளிகெரே கிராமத்தைச் சேர்ந்த சைத்ரா என்ற பெண்ணும் பலியானார். அவரைப் பற்றிய உருக்கமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

கருணை அடிப்படையில்...

சைத்ராவின் கணவர் சீனிவாஸ் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனாவால் இறந்துவிட்டார். கே.எஸ்.ஆர்.டி.சி.(அரசு) பஸ் போக்குவரத்து கழக ஊழியரான அவரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் சைத்ரா தனது மகன் சமர்த், மகள் சிருஷ்டி ஆகியோருடன் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.

மேலும் தனக்கு கருணை அடிப்படையில் கே.எஸ்.ஆர்.டி.சி. போக்குவரத்து கழகத்தில் பணி வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரி போராடி வந்தார். அதன் பலனாக கடந்த வாரம் அவருக்கு அரசு சார்பில் பணி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது மகள், மகன் மற்றும் குடும்பத்தினருடன் ஆன்மிக சுற்றுலா புறப்பட்டார்.

200 மீட்டர் தூரம்.

அவர்கள் தர்மஸ்தலா, ஹாசனாம்பா கோவில்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய வேளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். இன்னும் 200 மீட்டர் தூரம் பயணித்து இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு உயிருடன் சென்றிருப்பார்கள்.

ஆனால் அதற்குள் அவர்களின் உயிர் பறிபோய் விட்டதாக அவர்களது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர். ஏற்கனவே கணவனை கொரோனாவுக்கு காவு கொடுத்திருந்த சைத்ரா, தற்போது விபத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வழிப்பாதை

விபத்துக்கு காரணமான பால் வேன் ஒரு வழிப்பாதையில் வந்ததாக கூறப்படுகிறது. அதாவது அந்த சாலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதனால் ஒரு வழிப்பாதையை மட்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்த அனுமதித்து இருந்தார்கள்.

ஆனால் இதுதொடர்பாக அங்கு அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக விபத்துக்கு காரணமான பால் டேங்கர் லாரி வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தி விட்டதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

டிரைவர் கைது

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பானாவரா போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பால் டேங்கர் லாரி டிரைவர் நவீனை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்