இமாசல பிரதேசத்தில் உள்ள உலகின் உயரமான வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு
இமாசல பிரதேசத்தில் உள்ள உலகின் உயரமான வாக்குச்சாவடியில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. 62 வாக்காளர்களுக்காக இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
டிஷிகாங்,
நாடாளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) 57 தொகுதிகளில் நடக்கிறது. இதில் இமாசல பிரதேசத்தின் 4 தொகுதிகளும் அடங்கும்.
இதில் மண்டி தொகுதி நாடு முழுவதும் ஏற்கனவே கவனம் பெற்று இருக்கிறது. ஏனெனில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறக்கப்பட்டு இருக்கிறார். இவரை எதிர்த்து காங்கிரசின் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுகிறார்.
இதைப்போல உலகின் உயரமான வாக்குச்சாவடியை கொண்டிருப்பதும் மண்டி தொகுதியின் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும்.
அந்தவகையில் பனி படர்ந்த இமயமலையில் 15,256 அடி உயரத்தில் உள்ள டஷிகாங் எனப்படும் சிறிய கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிதான் உலகிலேயே உயரமான வாக்குச்சாவடியாக கருதப்படுகிறது.
டஷிகாங் மற்றும் அண்டை கிராமமான கெடே ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த வெறும் 62 வாக்காளர்களுக்காக இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. சீனா எல்லையோரம் அமைந்துள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாக டஷிகாங் கிராமம் அமைந்து இருக்கிறது.
காலம் காலமாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினாலும் தங்கள் வாழ்க்கைத்தரமோ, அடிப்படை வசதிகளோ இன்னும் மேம்படவில்லை என அந்த 2 கிராம மக்களும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக பாழடைந்த, கரடுமுரடான அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு தண்ணீர், சாலைகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன.
மழை மறைவு பிரதேசமாக விளங்கும் அந்த பகுதியில் ஆண்டுக்கு மிகவும் குறைந்த மழையோ அல்லது மழையோ இல்லாத நிலைதான் காணப்படுகிறது. எனவே அவர்கள் குடிநீருக்கு பனிப்பொழிவு மற்றும் பனிப்பாறைகளை நம்பியே உள்ளனர்.
ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக சமீப காலமாக பனிப்பொழிவு குறைந்து வருகிறது. இதனால் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் சிறிய குட்டைகள் மூலம்தான் தங்கள் தண்ணீர் தேவையை அவர்கள் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இதைப்போல போதிய வேலைவாய்ப்பும் இல்லாததால் வாழ்வாதாரத்துக்கு மிகவும் கஷ்டப்படுவதாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர். இதனால் விவசாயத்தையே அவர்கள் நம்பி உள்ளனர்.
அந்த பகுதிகளில் பெரும்பாலும் பட்டாணிதான் பயிரிடப்படுகிறது. ஆனால் அதன் விளைச்சல் போதிய அளவு இல்லாததால் உணவு மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இங்கு அரசியல்வாதிகள் பெரும்பாலும் வருவதில்லை எனக்கூறிய கிராம மக்கள், தேர்தல் நேரத்தில் வரும் தலைவர்களும் அப்போது தரும் வாக்குறுதிகளை பின்னர் நிறைவேற்றுவதில்லை என அந்த மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனினும் தங்கள் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்ற நம்பிக்கையிலேயே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதாக கூறியுள்ள அவர்கள், இந்த தேர்தலிலும் அதே நம்பிக்கையில் வாக்களிக்க தயாராகி வருவதாக தெரிவித்தனர்.
இவர்களது நீண்ட நாள் கனவு இந்த தேர்தலிலாவது நிறைவேறுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.