ஜன்னல் கண்ணாடியை திறப்பதில் தகராறு: ஓடும் பஸ்சில் பெண்கள் மோதல் - செருப்பால் தாக்கியதால் பரபரப்பு

ஓடும் பஸ்சில் இரு பெண்கள் செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-09 10:07 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓடும் பஸ்சில் இரு பெண்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பஸ்சில் ஜன்னல் ஓரம் இருந்த பெண் பயணி ஜன்னல் கண்ணாடியை தன்பக்கம் திறந்துள்ளார். இதனால், அந்த பெண் பயணிக்கு பின்னால் இருந்த மற்றொரு பெண் பயணியின் ஜன்னல் கண்ணாடி மூடியுள்ளது. இதையடுத்து, பஸ்சில் பின்னால் இருந்த பெண் பயணி முன்னால் இருந்த பயணியிடம் ஜன்னல் கண்ணாடியை தனக்கு திறக்கும்படி கூறியுள்ளார். இதற்கு முன்னால் இருந்த பெண் பயணி மறுக்கவே இரு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பின் இருக்கையில் இருந்த பெண் பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன் இருக்கையில் இருந்த பெண்ணை செருப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பஸ்சை உடனடியாக நிறுத்தும்படி கூச்சலிட்டனர்.

இதையடுத்து, பஸ்சை நிறுத்திய டிரைவர், சண்டையிட்ட இரு பெண் பயணிகளையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிட்டார். இந்த சம்பவத்தை பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்