பழுதடைந்த சாலையை சீரமைக்ககோரி கிராமமக்கள் போராட்டம்
சிக்கமகளூரு ஆசாத் பூங்காவில் பழுதடைந்த சாலையை சீரமைக்ககோரி கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளுரு (மாவட்டம்) தாலுகாவில் பாரனகோடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சிக்கமகளூரு டவுனுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலை 8 கிலோ மீட்டர்் தூரத்திற்கு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனர். மோசமான சாலையால் அப்பகுதியில் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வந்தது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளும் அவதி அடைந்து வந்்தனர். இதையடுத்து சாலையை சீரமைக்ககோரி பாரனகோடு கிராமமக்கள் தாசில்தார், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாரனகோடு கிராமமக்கள் நேற்று சிக்ககமளூரு ஆசாத் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
பாரனகோடு கிராமத்தில் சாலை பழுதடைந்து உள்ளது. இதனால் கர்ப்பிணி, நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்ககோரி அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. இந்தநிலையில் சாலையை சீரமைக்கவில்லை என்றால் வருகிற சட்டசபை தேர்தலை கிராமமக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.