அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் போராட்டம்
பர்வதனஹள்ளி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எகட்டி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பர்வதனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனாலும் அந்த கிராமத்தில் குடிநீர், சாலை, போக்குவரத்து போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்து அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நேற்றுமுன்தினம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். பின்னர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி போராட்டக்காரர்களை சமாதானம் செய்தனர். மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடக்கிய மனுவை வளர்ச்சி அதிகாரி கோவிந்தாப்பாவிடன் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.