இறைச்சிக்காக மாடுகள் கடத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்பு; கலெக்டர் செல்வமணி உத்தரவு
பக்ரீத் பண்டிகையையொட்டி இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.
சிவமொக்கா;
ஆலோசனை கூட்டம்
வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று சிவமொக்கா மாவட்ட கலெக்டருக்கு ஏராளமான மனுக்கள் வந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சிவமொக்கா மாவட்ட கலெக்டா் செல்வமணி தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில், சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத், மாநகராட்சி கமிஷனர் மாயண்ணா, கால்நடை கூடுதல் இயக்குனர் சிவயோகி, வட்டார போக்குவரத்து இணை இயக்குனர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீவிர கண்காணிப்பு
இந்த கூட்டத்தில் கலெக்டர் செல்வமணி பேசுகையில், பக்ரீத் பண்டிகையையொட்டி சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகள் கடத்தும் சம்பவங்களை தடுக்க வேண்டும். இறைச்சிக்காக மாடுகளை கடத்துவதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் பதற்றமான சூழல் நிலவாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.சிவமொக்காவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.