'அன்பு வெறுப்பை வென்றது.. வாய்மையே வெல்லும்' - காங்கிரஸ் கட்சி டுவீட்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
புதுடெல்லி,
அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும், "அதிகபட்ச தண்டனை காரணமாக தனிநபரின் உரிமை மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "வெறுப்புக்கு எதிராக அன்பு வெற்றி பெற்றுள்ளது. சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) ஜெய்ஹிந்த்" என்று பதிவிடப்பட்டுள்ளது.