வீரசைவ-லிங்காயத் சமூக அதிகாரிகளுக்கு நல்ல பதவி கிடைக்கவில்லை- சாமனூர் சிவசங்கரப்பா அதிருப்தி

காங்கிரஸ் ஆட்சியில் வீரசைவ-லிங்காயத் சமூக அதிகாரிகளுக்கு நல்ல பதவி கிடைக்கவில்லை என்று அக்கட்சியை சேர்ந்த சாமனூர் சிவசங்கரப்பா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-01 18:45 GMT

பெங்களூரு:-

அதிகாரிகள் சிக்கல்

கர்நாடக காங்கிரஸ் கட்சியை சோ்ந்த சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் வீரசைவ-லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு நல்ல பதவி கிடைக்கவில்லை. எங்கள் சமூக அதிகாரிகள் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள். எங்கள் சமூகத்தை சேர்ந்த நிஜலிங்கப்பா, வீரேந்திர பட்டீல் ஆகியோர் முதல்-மந்திரியாக பணியாற்றினர். அவர்களின் ஆட்சி காலத்தில் நாங்கள் நிர்வாகத்தை நடத்தினோம்.

அவர்கள் எங்களை நல்ல விதமாக நடத்தினார்கள். தற்போது எங்கள் சமூக அதிகாரிகள் உதவி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். எங்களுக்கு துணை முதல்-மந்திரி பதவி தேவை இல்லை. யாருக்கு வேண்டும் அந்த பதவி?. வாய்ப்பு இருந்தால் முதல்-மந்திரி ஆவோம். இல்லாவிட்டால் விட்டுவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தை கூறவில்லை

அவரது மகன் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் தோட்டக்கலை மந்திரியாக உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் கருத்து கூறியுள்ளார். கர்நாடகத்தில் வீரசைவ-லிங்காயத் சமூகம் ஒரு பலம் வாய்ந்த ஆதிக்க சமூகமாக உள்ளது. இதனால் அவரது இந்த கருத்து காங்கிரஸ் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறுகையில், "சாமனூர் சிவசங்கரப்பா வீரசைவ சமூகத்தின் தேசிய தலைவர். அவர் தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவர் மட்டுமே இத்தகைய கருத்தை கூறவில்லை, இந்த சமூகத்தின் பிற தலைவர்களும் இதே கருத்தை கூறுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் வீரசைவ-லிங்காயத் சமூக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்" என்றாா்.

Tags:    

மேலும் செய்திகள்