உத்தரகாண்ட்: தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சம்பவத்தில் நேபாள தொழிலாளர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-04-09 06:25 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் மாவட்டம் பெட்டால்காட் பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் தொழிலாளர்களை ஏற்றி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை ஓரத்தில் இருந்த 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நேபாள நாட்டை சேர்ந்த 7 தொழிலாளர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர்  காயமடைந்த 3 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த விசாரணையில் இறந்தவர்கள் விஸ்ராம் சவுத்ரி (50), தீரஜ் (45), அனந்த்ராம் சவுத்ரி (40), வினோத் சவுத்ரி (38), உதய்ராம் சவுத்ரி (55), திலக் சவுத்ரி (45) கோபால் பஸ்னியாத் (60) மற்றும் ராஜேந்திர குமார் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜேந்திர குமார் பெட்டால்காட் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் தான் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்