உத்தர பிரதேசம்: ரெயிலில் குளிர் காய்வதற்காக தீ மூட்டிய இருவர் கைது

குளிர் காய்வதற்காக ரெயில் பெட்டியில் சிலர் தீ மூட்டியதால் புகை கிளம்பியுள்ளது.

Update: 2024-01-06 14:01 GMT
கோப்புப்படம் 

லக்னோ,

கடந்த 3-ந்தேதி அசாமில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பர்ஹான் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதனை பர்ஹான் ரெயில்வே கிராசிங்கில் பணியில் இருந்த கேட்மேன் பார்த்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக இது குறித்து பர்ஹான் ரெயில் நிலையத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த ரெயில் சம்ரோலா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் ரிசர்வ் போலீஸ் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பெட்டியில் சிலர் குளிர் காய்வதற்காக தீ மூட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய 16 பயணிகளை ரிசர்வ் போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த ரெயில் அலிகார் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டது.

தொடர்ந்து அந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன்(23) மற்றும் தேவேந்திரா(25) ஆகிய இருவரும் தீ மூட்டியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மற்ற 14 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்