கன்னத்தில் அறைந்ததால் கோபம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்த கொடுமை
கன்னத்தில் அறைந்ததால் கோபம் அடைந்த சிறுவகள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்து உள்ளனர்.
பிலிபிட்
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மதோடன்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதான ரேகா அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சென்று வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை கிண்டல் செய்தும், பாலியல் ரீதியாக தொல்லை தந்தும் உள்ளனர். இதனிடையே, கடந்த 2-ம் தேதி பள்ளியை விட்டு வரும் போது அந்த இளைஞர்கள் வழக்கம் போல அவரை கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி ரேகா, அந்த இளைஞர்களில் ஒருவரான தினேஷ் யாதவ் என்பவரை கன்னத்தில் அறைந்து உள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்கள் அவரை 'பெண்ணிடம் அறை வாங்கியவன்' எனக் கூறி கேலி செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் அவமானமடைந்த அந்த இளைஞர், சிறுமியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதற்கு தனக்கு உதவும்படி அவரது நண்பரான அமர் சிங்கிடமும் அவர் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுமி ரேகாவை பழிவாங்குவதற்காக தக்க தருணத்தை அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி உடல்நிலை சரியில்லாததால் சிறுமி ரேகா பள்ளிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது தாயார் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட, தந்தை வழக்கம் போல விவசாயப் பணிக்கு சென்றுள்ளார். சிறுமி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த தினேஷும், அமர் சிங்கும் அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் ரேகாவின் வாயில் துணியை வைத்து கட்டி இருவரும் சேர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத அவர்கள், சிறுமி ரேகா மீது அங்கிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். வாயில் துணி இருந்ததால் ரேகாவால் சத்தம் போட முடியவில்லை.
இந்த சூழலில், அவரது தந்தை மதியம் வீட்டுக்கு வந்த போது, தனது மகள் தீயில் கருகி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பிலிபிட் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடலில் 80 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில், அவருக்கு நேற்றுதான் சுயநினைவு திரும்பியது. அப்போது அவர், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், தினேஷ் யாதவையும், அமர் சிங்கையும் போலீசார் கைது செய்தனர்.
ரேகாவின் நிலைமை இன்னும் ஆபத்தான கட்டத்தில் இருந்து தாண்டவில்லை என்றும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.