கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி. காதர் போட்டியின்றி தேர்வு

கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகராக யுடி காதர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2023-05-24 10:02 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. 15-வது சட்டசபை இன்று (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, கடந்த 22-ந் தேதி புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்புக்காக 3 நாட்கள் சிறப்பு கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்பு கர்நாடக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.

இதில், தற்காலிக சபாநாயகராக மூத்த எம்.எல்.ஏ.வான ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அதன்படி அவர், புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், சிறப்பு கூட்டத்தின் கடைசி நாளான இன்று புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு நேற்று யுடி காதர் வேட்பு மனு தாக்கல் செய்தார். கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு காதர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் உடன் இருந்தனர்.

இந்த நிலையில் சபாநாயகராக யு.டி. காதர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மங்களூரு தொகுதியில் 4 முறை போட்டியிட்டு யு.டி.காதர் எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 53 வயதாகிறது. கடந்த 2013-ம் ஆண்டு சித்தராமையா ஆட்சியில் சுகாதாரத்துறை மந்திரியாகவும், அதன்பிறகு, உணவுத்துறை மந்திரியாகவும் யு.டி.காதர் இருந்தார்.

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சியில் கூட நகர வளர்ச்சித்துறை மந்திரியாக அவர் இருந்தார். கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்பு சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக யு.டி.காதர் இருந்து வந்தார். தற்போது அவர் 16-வது சட்டசபையின் புதிய சபாநாயகராக பதவி ஏற்க உள்ளார். கர்நாடகத்தில் சிறுபான்மையினர் ஒருவர் முதல் முறையாக சபாநாயகராவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்