ஆங்கிலம் சரளமாக பேசமுடியாததால் வருத்தம்; மத்தியபிரதேசத்தில் பள்ளி மாணவி தற்கொலை
விமான பணிப்பெண் ஆக வேண்டும் என்று தனது மகள் விருப்பப்பட்டதாக மாணவியின் தயார் தெரிவித்துள்ளார்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் நியூ கவுரிநகர் காலனியை சேர்ந்த 17 வயது சிறுமி ஷையில் குமாரி. இவர் அதேபகுதியில் உள்ள பள்ளி பிளஸ்2 பயின்று வருகிறார்.
விமான பணிப்பெண் ஆக வேண்டும் என்பது ஷையில் குமாரியின் சிறுவயது முதலான விருப்பம் ஆகும். ஷையில் குமாரி ஆங்கில மொழி கற்பதில் சிரமம் இருந்துவந்துள்ளது. விமான பணிப்பெண் ஆக ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்பதாலும் தான் ஆங்கில மொழியில் சரிவர சரளமாக பேசமுடியவில்லை என்பதாலும் ஷையில் குமாரி ஆங்கில டியூசன் வகுப்பிலும் சேர்ந்துள்ளார்.
இதனிடையே, ஷையில் குமாரியின் தோழிகள் பலரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளனர். தனது தோழிகள் சரளமாக ஆங்கிலம் பேசுவதுன் தன்னால் அவ்வாறு பேச முடியவில்லை என்பதாலும் கடந்த சில நாட்களாக குமாரி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
இந்நிலையில், ஆங்கிலம் சரளமாக பேசமுடியாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஷையில் குமாரி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த ஷையில் குமாரியின் தயார், சகோதரி வீட்டிற்கு வந்தபோது குமாரி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட ஷையில் குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.