உ.பி.: தனியார் பஸ் கேபினில் இளம்பெண் பலாத்காரம்; ஓட்டுநர்கள் அட்டூழியம்
பஸ் ஓட்டுநர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்
ஜெய்ப்பூர்,
உத்தர பிரதேசத்தில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் சிலரும் இருந்தனர். 20 வயது இளம்பெண் ஒருவர் கான்பூர் நகரில் இருந்து ஜெய்ப்பூர் செல்வதற்காக அந்த பஸ்சில் ஏறியுள்ளார். அவர் பஸ்சின் கேபினில் அமர்ந்திருக்கிறார்.
பஸ்சில் ஆரிப் மற்றும் லலித் என 2 ஓட்டுநர்கள் இருந்தனர். இந்த நிலையில், பஸ்சில் பயணித்த இளம்பெண்ணை பஸ்சின் கேபினில் வைத்து ஓட்டுநர் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். கேபினை உள்புறம் இருந்து ஓட்டுநர்கள் பூட்டி விட்டு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
சம்பவத்தின்போது, அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் சேர்ந்து பஸ்சை நிறுத்தினர். ஆரிப்பை பிடித்தனர். லலித் தப்பியோடி விட்டார்.
இதுபற்றி கனோட்டா காவல் நிலைய உயரதிகாரி பகவான் சகாய் மீனா கூறும்போது, ஆரிப் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். லலித் தப்பி விட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது என கூறியுள்ளார்.