உத்தரப் பிரதேசம்: பிரோசாபாத்தில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-11-30 01:22 GMT

பிரோசாபாத்,

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் நேற்று மாலை கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நகைக் கடை உரிமையாளரான ராமன் குமார் என்பவர் அவரது குடும்ப உறுப்பினர்கள் 9 பேருடன் ஜஸ்ரானா பகுதியில் உள்ள பதம் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அவரது வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆக்ரா, எட்டா, மெயின்புரி மற்றும் பிரோசாபாத் ஆகிய இடங்களில் உள்ள 18 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 12 ஸ்டேஷன்களின் காவல்துறை பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட உயர் அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்