2 வயது குழந்தையை கால்வாயில் தூக்கி வீசிய தந்தை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த காவல்துறை
சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தை தன் தந்தையுடன் செல்வது பதிவாகியிருந்தது.
மீரட்:
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம், மதியாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலேமான். இவரது 2 வயது மகளை நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் காணவில்லை என சர்தானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுலேமானிடம் விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது, அவர் வீட்டில் இல்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தை தன் தந்தையுடன் செல்வது பதிவாகியிருந்தது. அப்பகுதியில் சென்றும் தேடினர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இதற்கு முன்பும் சுலேமானின் 2 குழந்தைகள் மர்மமான முறையில் காணாமல் போனதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறி உள்ளனர். இதனால் சந்தேகத்தின்பேரில் சுலேமானை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தன் குழந்தையை கால்வாயில் தூக்கி வீசியதாக கூறினார்.
அதற்கு அவர் கூறிய காரணம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. வீட்டில் 2 வயது பெண் குழந்தையும், அவளது சகோதரனும் சண்டை போட்டதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு காணாமல் போன 2 குழந்தைகள் குறித்தும் விசாரணை நடத்துகின்றனர். கால்வாயில் வீசி கொல்லப்பட்ட குழந்தையின் சடலத்தை தேடும் பணி நடைபெறுகிறது.