உ.பி. அரசு தேர்வில் நூதன முறையில் முறைகேடு; 21 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் அரசு தேர்வில் 6 மாவட்டங்களில் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 21 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-08-01 05:48 GMT


லக்னோ,



உத்தர பிரதேசத்தில் தலைநகர் லக்னோ உள்பட 12 மாவட்டங்களில் துணை நிலை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் கிளார்க் அளவிலான பதவிகளுக்கு நேற்று தேர்வு நடந்தது. 501 மையங்களில் நடந்த தேர்வில் 2.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த அரசு தேர்வில் பங்கேற்றவர்களில் சிலர் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதன்படி, தேர்வில் பங்கேற்றோர் புளூடூத் உபகரணம் உதவியுடன் விடைகளை பெற்றுள்ளனர்.

தேர்வு மையத்திற்கு வெளியே நரேந்திர குமார் பட்டேல் மற்றும் சந்தீப் பட்டேல் ஆகிய இருவர் காரில் அமர்ந்து கொண்டு விடைகளை அளித்து வந்துள்ளனர். பிரயாக்ராஜில் நடந்த இந்த சம்பவத்தில் முதலில் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அளித்த தகவலின்படி, இதில் ஒரு கும்பலே ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, தலைநகர் லக்னோ, வாரணாசி, கான்பூர், மொராதாபாத், கொண்டா மற்றும் பரேலி ஆகிய 6 மாவட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரசு தேர்வில் பயன்படுத்திய புளூடூத் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றிய விசாரணையில், இந்த கும்பலானது, தேர்வு எழுதியவர்களுக்கு புளூடூத் உபகரணங்களை வழங்கி உள்ளது. அது மிக சிறிய அளவில் இருந்துள்ளது. அதனால், காதுக்கு வெளியே அது பார்வைக்கு தெரிவதில்லை.

அந்த உபகரணத்தின் மைக்கானது ஏ.டி.எம். கார்டில் உள்ள சிப் போன்ற ஒன்றில் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த கார்டு கழுத்துக்கு கீழே பனியனுக்குள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில், தேர்வு எழுதியவர்கள், வெளியே இருந்து விடை அளித்தவர்கள் உள்ளிட்ட அரசு தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அந்த கும்பலை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்