உ.பி. மகா மேளாவில் ஏழை இளைஞர்களை மதம் மாற்ற முயற்சி; அதிர்ச்சி தகவல்
உத்தர பிரதேசத்தில் மகா மேளாவில் ஏழை இளைஞர்களை மதம் மாற்ற நடந்த முயற்சி பற்றிய அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகா மேளாவில் மதம் மாற்றும் முயற்சிகள் நடக்கிறது என போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து பிரயாக்ராஜ் போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. இதுபற்றி கூடுதல் துணை காவல் ஆணையாளர் சதீஷ் சந்திரா கூறும்போது, இதில், முக்கிய குற்றவாளியான முகமது ஹசன் காஜி என்பவர் மதரசாவில் ஆசிரியராக உள்ளார்.
இவருக்கு அபுதாபி உள்பட வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளது. இவருடன் 2 கூட்டாளிகள் இருந்துள்ளனர். அவர்கள் சில காலத்திற்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
முகமது மோனீஷ் என்ற ஆஷிஷ் குமார் குப்தா மற்றும் சமீர் என்ற நரேஷ் குமார் சரோஜ் ஆகிய அந்த இருவரும் மதமாற்றத்தின் ஒரு பகுதியாக புத்தகங்கள் மற்றும் பிரசார காகிதங்களை வினியோகம் செய்து வந்துள்ளனர் என கூறியுள்ளார்.
இவர்கள் 3 பேரும் இந்து மத பகுதிகள் மற்றும் கோவில்களில் ஏழைகளிடம் இஸ்லாமை ஊக்குவிக்கும் இலவச புத்தகங்களை வழங்கி வந்துள்ளனர்.
அதன்பின் அவர்களது முகவரி உள்ளிட்ட தொடர்புக்கான விவரங்களை பெற்று வந்துள்ளனர். பின்பு அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இந்துமத வழிபாட்டு தலங்களான காசி விசுவநாதர் கோவில், வாரணாசியில் உள்ள ஆஸ்ஸி காட் மற்றும் பிரயாக்ராஜில் உள்ள அனுமன் கோவில் பகுதிகளில் புத்தக வினியோகம் செய்ய ஏழை இளைஞர்களை தேடி பிடித்து அழைத்து வந்துள்ளனர்.
ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்து, அவற்றை வினியோகிக்க செய்துள்ளனர். அவர்களின் புகைப்படங்கள், மொபைல் எண்கள் மற்றும் பிற விவரங்களை வாங்கி கொண்டுள்ளனர் என காவல் உயரதிகாரி கூறியுள்ளார்.
அந்த 3 பேரிடம் இருந்து சந்தேகத்திற்குரிய வகையிலான 204 மதமாற்ற புத்தகங்கள், 3 மொபைல் போன்கள், 4 ஆதார் அட்டைகள், ரூ.2,500 பணம் மற்றும் ஒரு குறிப்பேடு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.