'தமிழக மீனவர் பிரச்சினை மனிதாபிமான விவகாரம்' இலங்கை அரசிடம், மத்திய மந்திரி எல்.முருகன் விளக்கம்

தமிழக மீனவர் பிரச்சினை, ஒரு மனிதாபிமான விவகாரம் என இலங்கை அரசிடம் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

Update: 2023-02-10 21:45 GMT

கொழும்பு,

மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கை சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-இலங்கை இடையே நீண்ட காலமாக தொடர்ந்து வரும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து அவர் விவாதித்தார்.

இந்திய தூதரகம் தகவல்

அப்போது, தமிழக மீனவர் பிரச்சினை, ஒரு மனிதாபிமான விவகாரம் எனவும், அவர்களது வாழ்வாதார பிரச்சினை என்றும் இலங்கை மந்திரியிடம் எல்.முருகன் விளக்கினார்.

இந்த தகவலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து உள்ளது.

முன்னதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கடந்த மாதம் இலங்கை சென்றிருந்த போதும் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆலோசனை நடத்தியதாக இந்திய தூதரகம் மேலும் குறிப்பிட்டு உள்ளது.

கோவிலில் சிறப்பு வழிபாடு

இந்த நிலையில் மத்திய மந்திரி எல்.முருகன் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார். முதலில் அங்குள்ள திருக்கேதேஸ்வரம் கோவிலில் அவர் சிறப்பு வழிபாடு செய்தார் அவரை கோவில் நிர்வாகிகள் அன்போடு வரவேற்றனர். மேலும் கோவில் மறுசீரமைப்பு பணிகளுக்கு இந்தியா அளித்த உதவிகளையும் அவர்கள் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.

பின்னர் மன்னாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எல்.முருகன், 150 குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

அதிபரை சந்திக்கும் திட்டம்

மேலும் இந்தியா-இலங்கை இடையே மீண்டும் படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னாருக்கும் எல்.முருகன் சென்றார்.

இது குறித்து இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், 'இரு நாட்டு மக்களுக்கு இடையேயான ஆழமான இணைப்பு, இருதரப்பு தொடர்பு மற்றும் வணிக பரிமாற்றங்களை ஊக்குவிக்கும்' என கூறப்பட்டு இருந்தது.

மத்திய மந்திரி எல்.முருகனின் இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மூத்த தலைவர்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்