'பொது சிவில் சட்டம் நிச்சயமாக நம் நாட்டை பலவீனமடையச் செய்யாது' - மாயாவதி கருத்து
பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை, ஆனால் அதை வைத்து பா.ஜ.க. செய்யும் அரசியலை எதிர்க்கிறோம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
லக்னோ,
போபாலில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்'' என்று தெரிவித்திருந்தார்.
பிரதமரின் பேச்சு குறித்து பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பகுஜன் சமாஜ் கட்சி பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை. பொது சிவில் சட்டம் நிச்சயமாக நம் நாட்டை பலவீனமடையச் செய்யாது. மாறாக பொது சிவில் சட்டத்தால் நாட்டில் மத நல்லிணக்கம் வலுவடையும். இருப்பினும் நம் நாட்டில் பல்வேறு நம்பிக்கைகள் கொண்டவர்கள், மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். அதையும் கவனத்தில் கொண்டு தான் செயல்பட வேண்டும்.
ஆகையால் இதை அமல்படுத்தும் முன்னர் பொது வாக்கெடுப்பு மூலம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. இந்த விவகாரத்தை அரசியலாக்கி வலுக்கட்டாயமாக நாட்டில் அமல்படுத்துவது சரியல்ல. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. அவசரம் காட்டுவது வேறு பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சியே ஆகும். எனவே அரசியல் செய்யாமல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 44-ன் கீழ் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தலாம் என்றே கூறுகிறது" என்று மாயாவதி தெரிவித்தார்.