'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் 12 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு

‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-16 17:08 GMT

புதுடெல்லி,

'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியாக குடிநீர் வசதி அளிக்க 'ஜல் ஜீவன்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்நிலையில், மொத்தம் உள்ள 19 கோடியே 44 லட்சம் கிராமப்புற வீடுகளில், இதுவரை 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே சமயத்தில், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான வீடுகளில்தான் குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த அளவாக, லட்சத்தீவில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட சதவீதம், பூஜ்யமாக உள்ளது.

நாடு முழுவதும் 9 லட்சத்து 6 ஆயிரத்து 846 பள்ளிகளுக்கும், 9 லட்சத்து 39 ஆயிரத்து 909 அங்கன்வாடி மையங்களுக்கும், 3 லட்சத்து 87 ஆயிரத்து 148 கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில், குறைந்த அளவாக, 57 சதவீத பள்ளிகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்