உத்தவ் தாக்கரேவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: அமித்ஷா
பாஜகவுக்கு துரோகம் செய்த உத்தவ் தாக்கரேவுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பாஜகவுக்கு துரோகம் செய்த உத்தவ் தாக்கரேவுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக சென்ற எம்.எல்.ஏக்கள், பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர். மேலும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும் கட்சியின் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
இத்தகைய அரசியல் சூழலில், மராட்டிய பாஜக பிரமுகர்களுடன் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், "சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட உத்தவ் தாக்கரேவின் பேராசைதான் காரணம். அதுவே அவர் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. மற்றபடி அதில் பாஜகவின் பங்கு எதுவுமே இல்லை.
உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு மட்டுமல்ல, மராட்ட்டியத்திற்கும் துரோகம் செய்துள்ளார். உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் பதவி தருவதாக நாங்கள் ஒருபோதும் வாக்கு கொடுக்கவில்லை. நாங்கள் எப்போதுமே வெளிப்படையாக அரசியல் செய்கிறோம். எங்கள் அரசியல் பூட்டிய அறைகளில் நடப்பதில்லை. அரசியலில் துரோகம் செய்பவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். உத்தவ் தாக்கரேவுக்கு தக்க பாடம் புகட்டுவதற்கான தருணம் வந்துள்ளது. துரோகிகளை சகித்துக்கொள்ளும் பழக்கம் இருக்கக்கூடாது. அரசியலில் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் துரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. துரோகம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக தண்டிக்கபட்டே தீர வேண்டும்" என்றார்.