பிரபல வாடகை டாக்சி சேவை நிறுவனமான உபெர் இந்தியாவை விட்டு வெளியேறப் போகிறதா..?

இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக வந்த செய்தியை, பிரபல கால்-டாக்சி சேவை நிறுவனமான உபெர் மறுத்துள்ளது.

Update: 2022-06-25 10:12 GMT

புதுடெல்லி,

வாடகை டாக்சி, ஆட்டோக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கென்று உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் செல்போன் ஆப் வழியாக சென்று இதற்கு பதிவு செய்தால் உடனடியாக காரோ அல்லது ஆட்டோவோ அந்த இடத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி செல்லும். நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த சேவையை குறிப்பிட்ட நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. தற்போது கார் மற்றும் ஆட்டோ சேவை மட்டுமே பெரும்பாலான நகரங்களில் கிடைக்கிறது. இதில், உபெர் நிறுவனம் மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டரில் பயணிகளை ஏற்றி சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் பைக் டாக்சி முறையை கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது.


இந்த நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக வந்த செய்தியை, பிரபல கால்-டாக்சி சேவை நிறுவனமான உபெர் மறுத்துள்ளது.


இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த 9 வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் எங்கள் நிறுவனம் அதன் சேவையை தொடங்கியது போலவே இப்போதும் எங்களுக்கு இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக உள்ளது.100க்கும் மேற்பட்ட நகரங்களில் எங்கள் சேவை உள்ளது. இதை வருங்காலங்களில் மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.


முன்னதாக, உபெர், தனது உணவு டெலிவரி சேவையை சொமேட்டோ நிறுவனத்திடம் விற்றுவிட்டது. உபெர் நிறுவனத்துக்கு பெங்களூருவை சார்ந்த நிறுவனமான ஓலா, கடும் போட்டியாளராக உள்ளது. ஆனால் இந்த இரு நிறுவனங்களும், அதிக கமிஷன் தொகை பெறுவதாக அதன் ஓட்டுனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.


இப்போதைய சூழலில் லாபம் இல்லாமல் இயங்கி வருவதால் இந்தியாவிலிருந்து உபெர் நிறுவனம் சேவையை நிறுத்தப்போவதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்