தெலங்கானாவில் 2 திருநங்கைகள் அரசு டாக்டர்களாக நியமனம்

தெலங்கானா மாநிலத்தில் இரு திருநங்கைகள் அரசு டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

Update: 2022-11-30 05:57 GMT

ஐதராபாத்:

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு டாக்டரகளாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கம்மம் பகுதியை சேர்ந்த டாக்டர். ருத் ஜான்பால் கொய்யலா கூறும்போது, "நான் கடந்த 2018-ல் ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தேன். ஆனால், திருநங்கை என்பதால், சுமார் 15-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நடந்த பணிக்கான நேர்காணலில் திருப்பி அனுப்பப்பட்டேன். ஆனால், ஜெனரல் பிரிவில் நான் தற்போது அரசு டாக்டராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.

பிராச்சி ராதோர் கூறுகையில், "அடிலாபாத்தை சேர்ந்த நான், ரிம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தேன். அதன் பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். நான் திருநங்கை என்பதால், அந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வர தயங்குவார்கள் என்று கூறி, பணியிலிருந்து நீக்கிவிட்டனர்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்