ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மெஸ்காம் என்ஜினீயர்கள் 2 பேர் கைது

சிக்கமகளூருவில் மின் இணைப்பு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மெஸ்காம் என்ஜினீயர்கள் 2 பேரை கைது செய்து ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Update: 2022-06-07 14:51 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக். இவா் தான் புதிதாக கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு சிக்கமகளூருவில் உள்ள மெஸ்காம் (மங்களூரு மின்சார கழகம்) அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த மெஸ்காம் என்ஜினீயர்களான சிதானந்த், மஞ்சுநாத் ஆகியோர் அபிஷேக்கிடம் மின் இணைப்பு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று அபிஷேக்கிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அபிஷேக், இதுகுறித்து ஊழல் தடுப்பு படையில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஊழல் தடுப்பு படையினரின் அறிவுரையின்பேரில் அபிஷேக் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை மெஸ்காம் என்ஜினீயர்களான சிதானந்த், மஞ்சுநாத்திடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை அவர்கள் வாங்கி உள்ளனர்.

அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்