டிஜிட்டல் சந்தையில் நம்பிக்கை தான் முதலீடு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

டிஜிட்டல் சந்தையில் நம்பிக்கை தான் முதலீடு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-08-02 16:24 GMT

பெங்களூரு:

டிஜிட்டல் சந்தை

பெண் தொழில்முனைவோர் அமைப்பு (உபன்டு) சார்பில் டிஜிட்டல் தொழில்நுட்பம், மகளிர் தொழில் முனைவோருக்கு புதிய பாதை என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் பெண்களின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல. தொழில்துறையில் பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் சந்தை வாய்ப்புகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் சந்தை பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

கைவினை பொருட்கள்

கிராமப்புறங்களில் உள்ள சிறு தொழில்கள் மற்றும் கைவினை பொருட்களுக்கு டிஜிட்டல் சந்தை வசதி அவசியம் ஆகும். அறிவாற்றல் என்பது ஒருவரின் சொத்து அல்ல. சமுதாயத்தில் அறிவு திறன் உள்ளவர்களுக்கு தனி மரியாதை உள்ளது. டிஜிட்டல் சந்தையில் முகம் தெரிவது இல்லை. நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை தரமாக வழங்க வேண்டும். அதன் நம்பகத்தன்மை மிக முக்கியம்.

இங்கு பொருட்களை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையே அறிமுகம் இருப்பது இல்லை. இங்கு நம்பிக்கை என்ற முதலீடு தான் முக்கியம். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பெண்கள் என்ஜினை போன்றவர்கள். பெண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கர்நாடகத்தில் புதிதாக 33 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது.

உருவாக்கும் திறன்

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் சுயஉதவி குழுவை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. கடவுள் தன்னால் அனைத்தையும் உருவாக்க முடியாது என்று கருதி பெண்களை உருவாக்கியுள்ளார். அத்துடன் பெண்களுக்கு உருவாக்கும் திறனையும் கடவுள் வழங்கியுள்ளார். பெண்கள் எதை வேண்டுமானாலும் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு டிஜிட்டல் சந்தை மூலம் உலக அளவில் சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்