ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை
பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பசவராஜ் பொம்மைக்கு நேரடி பங்கு
வாக்காளர்களின் தகவல்களை திருடும் விவகாரம் என்பது உலகத்திலேயே அபூர்வமாக நடப்பதாகும். அந்த ஒரு அபூர்வ சம்பவம் கர்நாடகத்தில் பெங்களூருவில் நடந்திருக்கிறது. இந்த முறைகேட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் நேரடி பங்கு உள்ளது. அவரே இந்த வழக்கின் முக்கியமான நபர். ஏனெனில் வாக்காளர்கள் பற்றிய சொந்த தகவல்களை திருடுவது, அந்த தவறை அரசே செய்வது ஒரு மிகப்பெரிய குற்றம்.
இந்த வழக்கில் சாதாரண அதிகாரிகள், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, விசாரணை நடத்துவது தேவையற்றது. பெங்களூரு நகர வளர்ச்சி துறை மந்திரியாக இருப்பவர் பசவராஜ் பொம்மை. அவரே வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து மாநில மக்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டும். ஆனால் வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்று பசவராஜ் பொம்மை கூறி வருகிறார்.
ஐகோர்ட்டு நீதிபதி தலைமையல்...
வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதி விசாரணை நடத்தினால் தான் இந்த விவகாரத்தில் உண்மை வெளியே வரும். தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். முதல்-மந்திரி உள்ளிட்ட தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அடுத்தகட்டமாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் அளிக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வாக்காளர்களின் தகவல்களை திருடியதுடன், வாக்காளர்களின் பெயர்களையும் திட்டமிட்டு நீக்கி இருக்கிறார்கள். இவ்வாறு சித்தராமையா கூறினார்.