முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம்

ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை

Update: 2023-02-19 20:31 GMT

பயணிகள் அதிருப்தி

கர்நாடகத்துக்கு தினமும் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். பெங்களூரு, மங்களூரு, மைசூரு, தார்வார் போன்ற பெரிய நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை அவர்கள் ஊடுருவி விட்டார்கள்.

பெரிய நிறுவனம் என்றாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அங்கிங்கெனாதபடி எங்கும் வேலை செய்கிறார்கள். ஒரு சிறு டீக்கடையை எடுத்துக் கொண்டாலும் கல்லாவில் இருப்பவரைத் தவிர, பலகாரங்கள் போடுவது, டீப்போடுவது, கிளாசுகளை கழுவுவதுவரை அவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கடும் உழைப்பாளிகள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையாக உழைக்கத் தெரிந்த நம்மவர்கள் என்ன ஆனார்கள்? இலவசங்களால் கொஞ்சம் வயிற்றில் பசியாறிப் போவதால், சோம்பேறி ஆனார்கள். விளைவு நாம் செய்யவேண்டிய வேலைகளை, வடமாநிலத்தார் வந்து செய்கிறார்கள். கல்லாவை நம்மிடம் அவர்கள் கைப்பற்றாமல் இருந்தால், சரி.

தொல்லைகள்

அதேநேரம் வடமாநில தொழிலாளர்களின் அதிக வரவால் நமக்கு பல்வேறு வேலைகள் நடந்தாலும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், ரெயில் பயணங்களில் அவர்களின் செயல்கள் நம்மை எரிச்சல் அடைய செய்கின்றன. பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, வகுப்பு மாறி பயணம் செய்வது, சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் புகுந்து பயணம் செய்வது, பாக்குகளை வாயில் போட்டு குதப்பி கண்ட, கண்ட இடங்களில் உமிழ்வது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களை அச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

இதுபற்றி பையப்பனஹள்ளியை சேர்ந்த பிரகாஷ் கூறுகையில், 'வட இந்தியர்கள் தென்இந்தியாவில் கால் பாதிக்க தொடங்கிவிட்டனர். பெங்களூருவில் கட்டுமான தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் அவர்கள் தான். இதனால் அவர்கள் அடிக்கடி சொந்த ஊருக்கு ரெயிலில் செல்வதும், அங்கிருந்து வருவதுமாக உள்ளனர். அவர்கள் பொது பெட்டியில் பயணிக்க டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டிக்குள் ஏறி இடத்தை பிடித்து கொள்கிறார்கள். அந்த இருக்கைகளுக்கு சொந்தக்காரர்கள் வந்தாலும் அதை விட்டுக்கொடுப்பது இல்லை.

மேலும் இருக்கும் இடத்திலேயே பாக்குகள் உள்ளிட்டவற்றை வாயில் மென்று அங்கேயே உமிழ்கிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி இருக்கைகளுக்கு மத்தியில் உள்ள இடத்தில் படுத்து கொள்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் ரெயில்வே அதிகாரிகள், முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களை கண்காணிக்க வேண்டும். சட்டவிரோதமாக இருக்கைகளில் அமருகிறவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

கசப்பன அனுபவம்

இதுபற்றி மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியைச் சேர்ந்த புட்டசாமி என்பவர் கூறியதாவது, ரெயிலில் முன்பதிவு செய்து வடமாநிலங்களுக்கு செல்வது மிகவும் கஷ்டமான பயணம் ஆகிவிடுகிறது. காரணம் முன்பதிவு பெட்டிகளில் குஜராத், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள். நாம் நம்முடைய டிக்கெட்டை காண்பித்து அது எங்களுடைய சீட் என்று அறிவுறுத்தினாலும் அவர்கள் இருக்கையைவிட்டு எழுந்திருப்பதில்லை.

மாறாக நம்மிடம் தகராறு செய்கிறார்கள். அவர்கள் வேறு, வேறு மொழிகளிலும் பேசுகிறார்கள். நம்மை பயங்கரமாக திட்டுகிறார்கள். ஒருமுறை நான் நிஜாமுதீன் ரெயிலில் சென்றபோது எனக்கு இவ்வாறாக கசப்பான அனுபவம் ஏற்பட்டது. அதில் இருந்து நான் ரெயிலில் பயணம் செய்வதை குறைத்துக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகம் சுழிக்கும் வகையில்...

இதுகுறித்து சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயப்பட்டணா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் கூறியதாவது, ரெயிலில் குடும்பத்துடன் செல்லும்போது திடீரென வடமாநில தொழிலாளர்கள் முன்பதிவு பெட்டிகளுக்குள் ஏறிக் கொள்கிறார்கள். அவர்கள் நமது இருக்கைகளில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். இடையூறு செய்கிறார்கள். நாம் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். சில நேரங்களில் கதவு ஓரங்களிலும், கழிவறைகள் அருகில் அமர்ந்து கொள்கிறார்கள். படுத்து தூங்குகிறார்கள். இதனால் நாம் நிம்மதியாக பயணம் செய்ய முடிவதில்லை. ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. அவர்கள் ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் யார் பொறுப்பேற்பது?. இதற்கு ரெயில்வே அதிகாரிகள் கடிவாளம் போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து சிக்கமகளூரு(மாவட்டம்) டவுன் பம்பா நகரில் வசித்து வரும் சிவில் காண்டிராக்டர் ஏழுமலை கூறியதாவது, வடமாநிலத்தவர்கள் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்கிறார்கள். அவர்கள் கடுமையான உழைப்பாளிகள் தான். ஆனால் ரெயில்களில் அவர்கள் செய்யும் அராஜகம் சொல்லி மாலாது. முன்பதிவு பெட்டிகளில் ஏறி அமர்ந்து கொள்வார்கள். அவர்களிடம் ஏதேனும் கூறினால் அராஜகத்தில் ஈடுபடுவார்கள். ரெயிலில் தங்கள் இஷ்டம் போல் இருப்பது, பாக்குகளை குதப்பி உமிழ்வது என அவர்கள் மற்ற பயணிகள் எரிச்சல் அடையும் வகையில் நடந்து கொள்வதை கண்டிக்க வேண்டும். ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் பாதுகாப்பாக வரும் போலீசார் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குற்றம்சம்பவங்களில்...

இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்த கருப்பையா கூறியதாவது, அசாம், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மங்களூருவில் அதிக அளவில் வசிக்கிறார்கள். அவர்கள் கேரளாவில் இருந்து மங்களூரு வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் ஏறிக் கொள்கிறார்கள். குறிப்பாக சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு முன்பதிவு பெட்டிகளில் ஏறி அங்குள்ள பயணிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கிறார்கள்.

சில நேரங்களில் அவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. அவர்களை முன்பதிவு பெட்டிகளில் அனுமதிக்காமல் ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் நிரந்தர தீர்வு

இந்திய ரெயில்வேயின் கீழ் செயல்படும் அகில இந்திய ரெயில் பயணிகள் நலவாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறும் போது, 'முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வடநாட்டுத் தொழிலாளர்கள் பயணம் செய்வதாக எங்கள் கவனத்துக்கு வந்து உள்ளது. வாராந்திர ரெயில்களில்தான் இந்த பிரச்சினை இருந்தது. தற்போது அனைத்து ரெயில்களிலும் இந்த பிரச்சினை இருப்பதாக பரவலாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக ரெயில்வே துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். அவர்களும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படையினர் இரவு நேர ரெயில்களில் மட்டுமே இருக்கிறார்கள், பகல் நேர ரெயில்களில் போலீசார் இருப்பதில்லை என்ற புகாரும் வந்து உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்' என்றார்.

பாதுகாப்புத்துறை அதிகாரி

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும் போது, 'ரெயில்களில் டிக்கெட் இல்லாமலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டும் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் ஏறி அனைத்து இருக்கைகளையும் வடநாட்டு தொழிலாளர்கள் ஆக்கிரமிக்கின்றனர். முறையாக டிக்கெட் வாங்கிப் பயணம் செய்யும் பயணிகளுக்கு உட்காரக்கூட இடம் கிடைப்பதில்லை. பயணிகளுடன் வடநாட்டு தொழிலாளர்கள் இடையூறு செய்வதுடன் அராஜகத்தில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் எங்களுக்கு புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் வடநாட்டு தொழிலாளர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் 'நீ இறங்கி போ பையா' என்று கூறி இறக்கி விட்டு நடவடிக்கை எடுக்கிறோம். சமீபத்தில் கூட கேரளாவில் இருந்து ஜார்கண்ட் நோக்கி சென்ற ரெயில் சேலம் அருகே வந்த போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக ரெயில்வே நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.

டிக்கெட் கட்டண் சலுகை ரத்து; சேவையும் கேள்விக்குறி

மூத்த பயணிகள் ஆதங்கம்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட் கட்டண சலுகைகளை கொரோனாவிற்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது யாராக இருந்தாலும் முழுக் கட்டணத்தில்தான் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அதுவும் குறிப்பாக தட்கல், பிரீமியம் தட்கல் என்ற முறையில் ஆம்னி பஸ்களில் விதிக்கப்படும் கட்டணம் போன்று கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் உயர்த்தி வசூலித்து வருகிறது. வேறுவழியின்றி முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் அதிகக் கட்டணம் செலுத்தி ரெயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் கட்டணத்தை முழுமையாக பெறும் ரெயில்வே நிர்வாகத்தால் ஏன் முழுமையான சேவையை வழங்க முடியவில்லை. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தும் ரெயிலில் முறையாகப் பயணிக்க முடியாத நிலைக்கு யார் காரணம்? இதற்கு எப்போது ரெயில்வே நிர்வாகம் தீர்வு காணப்போகிறது என்று சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து வடநாட்டு ரெயிலில் பயணம் மேற்கொண்ட மூத்த பயணிகள் சிலர் முணுமுணுத்து சென்றனர்.

பயணிகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும்

இதுகுறித்து ஓய்வுபெற்ற நிமான்ஸ் ஆஸ்பத்திரி மனநல டாக்டர் பிரபுதேவா கூறியதாவது:-

நான் பலமுறை ரெயில்களில் பயணித்து இருக்கிறேன். எப்போதும் முன்பதிவு செய்துதான் பயணிப்பேன். ஆனால் முன்பதிவு பெட்டிகளில் சில நேரங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏறிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக சென்னை, மும்பை செல்லும் ரெயில்களில் அதிகமாக அவர்கள் பயணிக்கிறார்கள். முன்பதிவு பெட்டிகளில் ஏறி அவர்கள் பல தொல்லைகளை கொடுக்கிறார்கள். குறிப்பாக வடமாநில பெண்கள், நம் இருக்கைகளில் அமர்ந்து கொள்கிறார்கள்.

சில நேரங்களில் படுத்தும் கொள்கிறார்கள். அவர்களை நம்மால் ஒன்றும் சொல்ல முடிவதில்லை. ஏதாவது சொன்னால் கடுமையாக பேசுகிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். தாங்கள் எதையோ பறிகொடுத்து விட்டது போன்றும், தாங்கள் தோல்வியை சந்தித்தது போன்றும் அவர்கள் உணர்ந்து மனதளவில் நொந்து போகிறார்கள். மேலும் அவர்களால் தங்களது கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் அவதிக்கு உள்ளாகிறார்கள். தங்களை காப்பாற்ற ரெயில்வே அதிகாரிகளோ, போலீசாரோ வரமாட்டார்களா என்றும் ஏங்குகிறார்கள். பயணிகள் இதுபோன்ற மனநிலைக்கு ஆளாவது ஏற்புடையதல்ல. இதை ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே போலீசார் கண்காணிக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்களை முன்பதிவு பெட்டிகளில் ஏறவிடாமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்