துபாயில் இருந்து கடத்தல்; மங்களூரு விமான நிலையத்தில் ரூ.44¼ லட்சம் தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.44¼ கிராம் தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-09-11 14:50 GMT

மங்களூரு;

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், கொல்கத்தா, டெல்லி, தமிழ்நாடு போன்ற வெளி மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தில் போலீசார், தொழில் பாதுகாப்பு படையினர், சுங்கவரித்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுங்க வரித்துறையினர் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்ெபாருட்கள் கடத்துவதை கண்டறித்து அவற்றை கைப்பற்றி வருகின்றனர்.

தங்கம் கடத்தல்

இதுபோல் நேற்றுமுன்தினம் துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் வந்தவர்களையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணி உள்பட 5 பேர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் தனியாக அழைத்து, அவர்களையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் செருப்பு, ஷூவில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.


5 பேர் கைது

அவர்களிடம் இருந்து ரூ.44.33 லட்சம் மதிப்பிலான 869 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். விசாரணையில் அவர்கள் 5 பேரும் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பெண் உள்பட 5 பேரையும் சுங்கத்துறையினர் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்