டெல்லியில் சூறைக்காற்றுடன் கனமழை; மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்!
இரவு 8 மணி வரை மரங்கள் விழுந்ததாக மொத்தம் ௨௯௪ புகார்கள் வந்துள்ளன என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார புறநகர் என் சி ஆர் பகுதிகளில், நொய்டா மற்றும் குர்கான் ஆகிய இடங்களில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
டெல்லியில் வீசிய பலத்த காற்றால் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டெல்லியில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக டெல்லி ஜமா மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த 50 வயது முதியவர் மீது பால்கனி இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வடக்கு டெல்லி பகுதியில் 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரவு 8 மணி வரை மரங்கள் விழுந்ததாக மொத்தம் 294 போன் அழைப்பு புகார்கள் வந்துள்ளன என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி கபுதார் மார்க்கெட் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில், மரத்துக்கு அடியில் கார் ஒன்று சிக்கியது. அதில் இருந்த குழந்தை உட்பட 3 பேர் கொண்ட குடும்பம் பத்திரமாக மீட்கப்பட்டது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
A family of three including a child rescued after their car was trapped under a tree following hailstorm in Delhi's Kabutar market area: Delhi Police pic.twitter.com/91mUb1fwZu
— ANI (@ANI) May 30, 2022
கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் நீண்ட நேரமாக அணிவகுத்து நிற்கின்றன. மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக டெல்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.