டெல்லியில் தொடர்ந்து 3வது நாளாக வெளுத்து வாங்கும் மழை! மரங்கள் முறிந்து விழுந்தன - போக்குவரத்து நெரிசல்

தலைநகர் டெல்லியில், கனமழை பெய்தது.இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-09-24 12:58 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்தது.இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை காலை 8.30 மணி வரை நகரில் 15 மிமீ மழை பெய்துள்ளது. கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிஜாமுதீன் பாலம், சிங் பார்டர், சிடிஆர் சௌக், மெஹ்ராலி, எம்பி சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்கள். அதன்படி, வானிலை மைய அறிக்கையின்படி, 'டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான தீவிர மழை பெய்யும்'. ஆகவே பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஜ்லிஸ் பூங்காவில் இருந்து ஆசாத்பூர் நோக்கி செல்லும் வண்டிப்பாதையில் சாலை எண் 51இல் பள்ளம் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ராஜ்தானி பார்க் மெட்ரோ ஸ்டேஷனில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரோஹ்தக் சாலையில் முண்ட்காவிலிருந்து நங்லோய் நோக்கி செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமேற்கு டெல்லியின் ஆசாத்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. நஜப்கர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை ஒட்டிய நொய்டா , குருகிராம் பகுதிகளிலும் கனமழை பெய்தது.மழை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்